ஞாயிறு, 7 மார்ச், 2021

H.M.Jayaram IPS History

 “பொட்டல் காட்டு தேசத்தில்..
பூத்த காக்கி "பூ" வின் கதை”


குறல்:

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

                                                    எய்துவர் எய்தாப் பழி.

பொருள்:

                     நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும் இல்லையேல் இழிவான பழி வந்து சேரும் என்ற வள்ளுவனின் வரிகளுக்கு ஏற்ப நல்ல நடத்தையினால் உயர்வுக்கு வந்த திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் H.M. ஜெயராம் இ.கா.ப., அவர்களின் கதை இது..

                     தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள ஒரு பொட்டல் காட்டு புழுதி மக்கள் வாழும் ஒரு குக்கிராமத்தில் விவசாயின் மகனாக 07-05-1966-ல் காக்கி “பூ” வாக மலர்ந்து, பேருந்து வசதி கூட இல்லாத அந்த கிராமத்தில் தன் தந்தையுடன் விவசாய பணிகளை செய்து கொண்டே தன் கடின உழைப்பால் சுத்துப்பட்டு கிராமத்தில் எவரும் படிக்க முடியாத அளவில் 1992 வாக்கில் பெங்களூருவில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் எம்.பில் வரை பயின்று மக்களுக்கு சேவை செய்யும் உன்னத பணியான இந்திய காவல் பணிக்கு 1996-ல் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று தன் முதல் பணியாக தமிழகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் அப்போதைய காலகட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு கோவை மாநகர காவல் உதவி ஆணையராக பணியாற்றி மக்களிடத்தில் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்டினார். தொடர்ந்து நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக உயர்ந்து 2015 வாக்கில் தமிழகத்தின் தலைநகரான சென்னை பெருநகரத்தில் போக்குவரத்து காவல் துறையில் பல்வேறு புதிய உத்திகளை கையாண்டு சாலை விபத்துக்களைக் குறைத்த பெருமை இவருக்கு உண்டு.

                மேலும் இவர் தன் வாழ்க்கையில் வெற்றி பெற "த-தன்னம்பிக்கை, கு-குறிக்கோள், தி-திட்டமிடல்" என்ற மூன்றெழுத்து மந்திரமான “தகுதி” என்ற தாரக மந்திரத்தை வைத்து கடின உழைப்பால் அதிகாரியாக உயர்ந்து இன்று திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பேற்று பல்வேறு அதிரடியான புதிய யுக்திகளை காவல்துறையில் கொண்டு வந்து “காவல்துறை உங்கள் நண்பனாக அல்லாமல் உங்களில் ஒருவனாக” மாற்றி வருகிறார்..

                         அதில் சமீபத்தில் தீரன் பட பாணியில் சீர்காழியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடநாட்டு கொள்ளையர்களில் நான்கு நபர்களில் ஒருவனை என்கவுண்டர் செய்தும் மற்ற மூன்று நபர்களை துப்பாக்கி முனையில் கைது செய்து அவர்கள் கொள்ளையடித்த பணம், நகைகளை 5 மணி நேரத்தில் மீட்ட பெருமை இவரை சாரும்..

                   மேலும் மனுநீதிச் சோழன் என்ற மன்னன் தன் நாட்டு மக்கள் எந்த நேரத்திலும் தன்னை அணுகி நீதி பெற தன் அரண்மனை வாசலில் மணி கூண்டு கட்டி அதில் ஒலி எழுப்பி நீதி கேட்டு வருபவர்களுக்கு நீதி வழங்கினார் என்பதை அனைவரும் அறிவோம் ஆனால் இவரோ ஒரு படி தாண்டி “பெட்டிசன் மேளா” என்ற திட்டத்தைக் கொண்டு வந்து மக்கள் இருக்கும் இடத்திற்கே காவல் அதிகாரிகள் சென்று பொதுமக்களிடம் மனுவை பெற்று விசாரணை செய்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என மத்திய மண்டல அளவில் உத்தரவிட்டதோடு அல்லாமல் அதை நடைமுறைப்படுத்திக் காட்டினார்..

   சமீபத்தில் கூட “புன்னகையை தேடி” (Operation Smile) என்ற புதிய குழுவை அமைத்து மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டத்தில் சுமார் 800 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்கள் தொடர்ந்து கல்வி பயில வழி வகுத்த பெருமை இவருக்குண்டு...

                   இது மட்டுமல்ல திருச்சி மத்திய மண்டல அளவில் கிராமப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களுக்கு உதவும் வண்ணம் கிராமம் தோறும் காவல் கண்காணிப்பு அலுவலர் (VVPO) என்ற கிராம காவலரை நியமனம் செய்து கிராம மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதுடன் அக்கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நபர்களை கண்காணிக்க இந்த புதிய திட்டத்தை அறிமுகம் செய்து நடைமுறைப்படுத்தினார்..

                         இவ்வராக கடந்த ஆண்டு “நிவர்” புயல் கடலில் மையம் கொண்டதோ! இல்லையோ!.. இவர் கடற்கரை மாவட்டமான நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் புயல் உருவான நாட்களிலிருந்து மையம் கொண்டு புயல், மழை என்றும் பாராமல் முழங்கால் வெள்ளத்திலும் பணியாற்றி கடற்கரையோர மக்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு போதிய நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கினார்... இந்நிகழ்வில் மக்களிடத்தில் காவல்துறை உங்கள் நண்பன் என்பது போய் காவல்துறை உங்களில் ஒருவன் என்று உணரும் வண்ணம் பணிபுரிந்தார்..

                             இப்படி இவருடைய பணிகள் விர்ச்சுவல் காப் (Virtual App) முதல் விழிப்புணர்வு வாகனம் (Awareness Vehicle) வரை சொல்லிக்கொண்டே போகலாம்... இவ்வாறாக எத்தனை பணிகள் இருந்தாலும் உடன் பணிபுரியும் காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை அனைவரும் தங்கள் காவல் பணியை முழு மனதுடன் செயல்படும் வண்ணம் காவல் ஆளிநர்களுக்கு கொடுக்கப்பட்ட குற்ற பின்னணி இல்லாத அனைத்து தண்டனைகளையும் ரத்து செய்து காவலர்களின் மனதில் ஒரு நல்ல உயர் அதிகாரி என்ற இடத்தை பிடித்தார்..

                                மேலும் காவலர்களின் நலனில் அக்கறை கொண்டு வாரம்தோறும் நடைபெறும் கவாத்து பயிற்சியில் தானும் பங்குபெற்று அவர்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருவதுடன் மது பழக்கத்தில் இருந்து மீள முடியாது தொடர்ந்து மது அருந்தும் காவலர்களை இனம்கண்டு அவர்களுக்கு யோகா, உடற்பயிற்சி மற்றும் மருத்துவ ஆலோசனை போன்ற வசதிகளை காவலர்களுக்கு செய்து வருகிறார்..

                           மேலும் தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டத்திலும் குறைந்த விலையில் காவலர்கள், காவலர் அங்காடியின் (Police Canteen) மூலம் மளிகை பொருட்கள் வாங்க பிள்ளையார் சுழி போட்ட பெருமை இவரைச் சேரும் ‌...

                        இவ்வாறாக பொதுமக்கள் முதல் காவல் ஆளிநர்கள் வரை தன்னைத் தேடி யார் உதவி என்று வந்தாலும் அவர்களின் குறைகளை காது கொடுத்து கேட்டு அவர்களுக்கு உதவும் குணமுடையவராக இருந்து வருகிறார்..

                        இவர் தன் வாழ்வில் கரையும் மெழுகில் இருளை கடந்துவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் தன் வாழ்வில் பல கடினமான இருளைக் கடந்து தொடர்ந்து நம்பிக்கையுடன் பயணித்து வரும் இந்த “பொட்டல் காட்டு தேசத்து காக்கி “பூ” காவலன்” H.M. ஜெயராம் இ.கா.ப., அவர்களின் பணி சிறக்க காவலர் இராமகிருஷ்ணன் ஆகிய நான் கனம் அய்யா அவர்களை வாழ்த்தி இவரின் சீரிய பணிக்கு ஒரு ராயல் சல்யூட் அடிப்பதில் பெருமை கொள்கிறேன்..

    உன் மதிப்பை முடிவு செய்ய

                       வேண்டியது நீ தான்..

    உன்னை சுற்றி இருப்பவர்கள்

                                                     அல்ல...

H.M. ஜெயராம் இ.கா.ப,.

காவல்துறை தலைவர்,

மத்திய மண்டல காவல்துறை,

திருச்சி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக